கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
x

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 6 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதோடு, மார்க்சியத்தை அவதூறாக பேசி வருகிற, கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் நீலமேகம், மனோகரன், பக்கிரிசாமி, ஜெயபால், செந்தில்குமார், கண்ணன், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.


Next Story