தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தி.மு.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத முதலமைச்சர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்துவிடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் குறித்து நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்காத தி.மு.க. அரசு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து தமிழகத்தில் நிலைமை என்ன என்று கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. நடத்திவரும் 'போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழ் நாட்டை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த மக்கள் விரோத தி.மு.க.-விற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.