திருவள்ளூரில் சுதந்திர தினவிழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


திருவள்ளூரில் சுதந்திர தினவிழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாவை பறக்கவிட்டார். பின்னர் அவர் திறந்த வேனில் சென்று காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, வேளாண்மை துறை, வருவாய்த்துறை என பல்வேறு துறைகளின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 804 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அதை தொடர்ந்து கலெக்டர், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 20 காவலர்களுக்கு பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கினார். மேலும் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 233 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஜெயகுமார், சப்-கலெக்டர் மகாபாரதி, தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் தினேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


Next Story