இந்தியா கூட்டணியில் மக்கள் இருப்பதால் வலிமையாக இருக்கிறது - முகுல் வாஸ்னிக்


இந்தியா கூட்டணியில் மக்கள் இருப்பதால் வலிமையாக இருக்கிறது - முகுல் வாஸ்னிக்
x

நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லாத கட்சிகள் வெளியேறலாம் என்று முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் -தி.மு.க. இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடந்து முடிந்தது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், "நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தி.மு.க.நிர்வாகிகளோடு முதல் ஆலோசனை கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம். எங்களைப்போன்று தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய கூட்டணி கட்சிகள் குறித்தும் விவாதித்தோம். மத்தியில் நிலவும் ஆட்சி மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயக அரசியல் முறைப்படி அவர்கள் எப்படி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? புதுச்சேரி தொடர்பாகவும் விவாதித்தோம். தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுப்பதற்காக அடுத்த கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டம் சிறப்பாகவும், நேர்மறையாகவும் நடைபெற்றது. நாங்கள் (தி.மு.க.-காங்கிரஸ்) மீண்டும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழ்நாடு முக்கியமான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.

தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இனிமையாக நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் நீண்டகாலமாக நட்பில் உள்ளவர்கள். நீண்டகாலமாக 2 கட்சிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இது நாட்டை அழிக்கும் சக்திகளுக்கும், இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கும் எதிராக போராட உதவும் என்று நம்புகிறோம். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்ற உடன் தொகுதிகள் குறித்து அறிவிப்போம்.

'இந்தியா' கூட்டணி இன்று சந்திக்கும் நிலை கடந்து போகும். விரைவில் இந்தியா கூட்டணி வலுவானதாக மாறும். மக்கள் எங்களோடுதான் நிற்பார்கள். நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லாத கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறலாம். சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் மக்களின் ஆதரவு இல்லை என்று கூறுவது தவறானது" என்று அவர் கூறினார்.


Next Story