மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தீவிரம்: சென்னையில் 2 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை


மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தீவிரம்: சென்னையில் 2 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
x

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

சென்னை மாநகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிட கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதம் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 15 மண்டலங்களில் 624 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,457 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதில் 1,290 மெட்ரிக் டன் அளவிலான கட்டிட கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 606 கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story