பா.ஜ.க.வை நெருங்கி செல்கிறதா தி.மு.க.? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதில்


பா.ஜ.க.வை நெருங்கி செல்கிறதா தி.மு.க.? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதில்
x

ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதில் தி.மு.க., பாரதீய ஜனதாவை அனுசரித்து நெருங்கி செல்வது போன்ற தோற்றம் ஏற்படுவதாக வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு சர்வதேச நிகழ்வு என்றும், அதற்கு பிரதமர் மோடியை அழைத்ததில் தவறு சொல்ல முடியாது என்றும் கூறிய அவர், தி.மு.க.வும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவே தான் பார்ப்பதாகவும் பதில் தெரிவித்துள்ளார்.

மேலும், தி.மு.க.வுடனான கூட்டணியில் தாங்கள் இருந்தாலும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற விஷயங்களில் அரசுக்கு எதிராக போராடியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரோத நடவடிக்கைகள் என்றால் தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தி.மு.க. அரசு, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, அரசுடன் ஆலோசிக்காமலேயே காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதால் தி.மு.க. அரசு புறக்கணித்ததாகவும், அண்ணா பல்கலைக்கழக விழா அரசுடன் முறையாக ஆலோசனை செய்யப்பட்டு நடந்ததால் இரண்டையும் ஒன்றுபடுத்தி பேசுவது சரியாக இருக்காது என்றும் பதில் தெரிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசுகையில், தற்போதைய அரசியல் நிகழ்வுகளை பார்க்கும் போது அ.தி.மு.க. வலுவிழந்து வருவதாகவும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையிலான போட்டியாக தான் இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தான நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்துள்ளார்.


Next Story