நீதிமன்றம் கூறியபடி கவர்னர் நடப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முடியாது.
சென்னை,
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து கவர்னர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு சிறப்பு சட்டசபை தொடரைக் கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதற்கிடையே, இன்று உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார் என மத்திய அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி தெரிவித்தார்.
அதற்கு தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது. பஞ்சாப் மாநில கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்திலும், பண மசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின்படி கவர்னர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் திருப்பி அனுப்பவேண்டும். அல்லது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும். இந்த 3 வாய்ப்பு தான் கவர்னருக்கு உள்ளது.
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை முடக்கி வைக்க முடியாது. தமிழக முதல்வரை கவர்னர் அழைத்து இதுகுறித்து பேசி தீர்வு காணலாம். பல விஷயங்கள் குறித்து கவர்னர், முதல்வர் இடையே பேசி தீர்வு காண முடியும். இதை கவர்னர் செய்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும். இல்லாவிட்டால் நாங்களே உத்தரவிட நேரிடும் என்றார்.
இந்நிலையில், கவர்னரின் அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனிமேலாவது கவர்னர் நீதிமன்றம் கூறியபடி நடப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.