ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி


ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி
x
தினத்தந்தி 14 March 2024 3:27 PM GMT (Updated: 14 March 2024 3:33 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாயலத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாக உள்ளதாக தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகிறார். தொடர்ந்து தவறான தகவல் பரப்புவதால் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். போதைப்பொருள் நடமாட்டத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கிறது என தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.

தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகம் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததை, 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு பெருவாரியாக கட்டுப்படுத்தியுள்ளது.

ஜாபர் சாதிக்கிற்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜாபர் சாதிக் மீது அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 2013-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 2017-ம் ஆண்டில் ஜாபர் சாதிக் விடுதலை செய்யப்பட்டார். போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தேர்தலில் தி.மு.க. பெறப்போகும் வெற்றியால் எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story