கோவையில் ஜனவரி 6-ந்தேதி மாநாடு: ஓபிஎஸ் அறிவிப்பு
ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடைபெறும் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாருடன் கூட்டணி வைப்பது, தேர்தலுக்கு தயாராவது, கட்சியை பலப்படுத்துவது குறித்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்னென்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கிறோம். கட்சியின் அடுத்த மாநாடு எங்கே நடத்தப்பட வேண்டும் என்று தலைமைக்கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கலந்து பேசினோம்.
இதில், அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி பேச வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தேர்தல் வரும்போது பார்க்கலாம். பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருக்கிறோம். நட்பின் அடிப்படையில் பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் பேசுவோம்.
கூட்டுப்பொறுப்பில் இருந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை.எதிர்க்கட்சி தலைவர் மட்டும் தான் உள்ளது. மற்ற பொறுப்புகள் எனது விருப்பத்தின் அடிப்படையில்தான் கொடுக்க முடியுமே தவிர சட்டத்தின் அடிப்படையில் கொடுக்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் விருப்பத்தின் பேரில்தான் இருக்கை வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்ற பொறுப்பு இல்லை. துணை முதலமைச்சர் பொறுப்புக்கு சிறிய அதிகாரம் கூட கிடையாது. அது ஒரு டம்மி பதவி. அதுபோலத்தான் இதுவும்." இவ்வாறு அவர் கூறினார்.