கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டன. மேலும், இந்த திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான நாளை மறுதினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த உடன் ரூ.1,000 உரிமைத்தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது

பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 1 ரூபாய் செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா? என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது


Next Story