கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தல்; 2 ரவுடிகள் கைது
கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
சிறையில் இருந்தபோது...
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 40). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்தபோது, அதனை தட்டிக்கேட்ட தனது தந்தை கோபாலை கோபத்தில் தள்ளிவிட்டார். இதில் கோபால் இறந்ததால், சாமிநாதன் கைது செய்யப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருடன் சிறையில் இருந்த கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள கொளக்குடி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரமேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ரமேஷ் ஜாமீனில் ெவளியே வருவதற்காக சாமிநாதனிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சாமிநாதன் தனது மனைவியிடம் கூறி, கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி ரூ.35 ஆயிரத்தை சென்னையில் உள்ள ராஜமாணிக்கம் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரமேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
திருப்பி கேட்டார்
இதைத்தொடர்ந்து ரமேசுக்கு கடனாக கொடுத்த பணத்தை சாமிநாதன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் ரமேஷ் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23-ந் தேதி சாமிநாதனை தொடர்பு கொண்ட ரமேஷ் தனது நகை வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில், அவரது கடனை அடைத்து விடுவதாக கூறி மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய சாமிநாதன் தனது மனைவியின் மூலம் மீண்டும் ரூ.30 ஆயிரம் ஏற்பாடு செய்து ரமேஷிடம் கொடுத்துள்ளார். மறுநாள் சாமிநாதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரமேஷ், அணைக்குடம் அய்யனார் கோவில் அருகில் காத்திருந்து, அங்கு மோட்டார் சைக்கிளில் வரும் 2 பேருடன் சேர்ந்து ஜெயங்கொண்டம் வந்துவிடு, அங்கு உனக்கு பணம் தருகிறேன், என்று கூறியுள்ளார்.
தாக்குதல்
இதனை நம்பிய சாமிநாதன் அணைக்குடம் அய்யனார் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் செஞ்சுடர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றுள்ளார். ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியில் ரமேஷ் இருந்த வீட்டிற்கு ெசன்ற சாமிநாதன், அங்கு ரமேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த கமிட்டி செல்வம் என்பவர் சாமிநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிநாதனை அங்கேயே கட்டி வைத்து, 'மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் உன்னை விடுவிக்க முடியும், உனது மனைவியிடம் தெரிவித்து பணத்துக்கு ஏற்பாடு செய்' என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட சாமிநாதன், பணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளார். மேலும் தான் சென்று பணத்தை பெற்று வந்து விடுகிறேன் என்று, தன்னை கடத்தி வைத்திருந்தவர்களிடம் கூறி, லாவகமாக அங்கிருந்து அவர் தப்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இது குறித்து சாமிநாதன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து, மேலக்குடியிருப்பு பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த உதயநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் செஞ்சுடர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய ரமேஷ் மற்றும் கமிட்டி செல்வம் ஆகியோரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரும், பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.