கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:  எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2024 10:06 AM GMT (Updated: 5 Jan 2024 11:50 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறி, உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி எடப்பாடி தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தி உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன்பின்னர் தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உத்தரவிட்டனர்.


Next Story