சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்


சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி அறிமுகம் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார்
x

சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி ஒன்றை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியை முறைப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை

சென்னை நகரில் தற்போது ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணி நடக்கிறது. இதே போன்று மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி ஆங்காங்கே சாலைகளில் திடீர் விபத்துகளும், போராட்டங்களும் நடக்கின்றன. இதனால் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை போக்குவரத்து போலீசார் செய்து வருகிறார்கள். முன்கூட்டியே திட்டமிடும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான விவரம் செய்தி குறிப்பு வாயிலாக பத்திரிகைகள் மற்றும் இதர சமூக ஊடகங்களுக்கு கமிஷனர் அலுவலகம் மூலம் அறிவிக்கப்படுகிறது.

ஆனால் போராட்டம், விபத்து போன்றவை ஏற்படும் போது திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை செய்திக்குறிப்பு வாயிலாக அறிவிக்க முடியாது. பொதுவாக போக்குவரத்து மாற்றங்கள் பற்றிய சாலை வரைப்படங்களை (மேப்) கூகுளில் வெளியிடும்போது, அது வழியாக வெளியாக குறைந்தது ஒரு நாள் ஆகும். ஆனால் தற்போது 15 நிமிடங்களில் இதுபற்றி வரைப்பட விவரங்கள் வெளியாக புதிய செயலி ஒன்று தனியார் நிறுவன உதவியோடு வடிவமைக்கப்பட்டது.

அந்த செயலி கடந்த 4 நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதால் அந்த செயலியை அறிமுகப்படுத்தும் விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு இந்த செயலியை முறைப்படி தொடங்கி வைத்தார். தற்போது இந்த செயலியின் செயல்பாடு சென்னையில் உள்ள சில சாலைகளில் மட்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக இந்த செயலியின் பயன்பாடு சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் பயன்பாட்டுக்கு வரும். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி ஷரத்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையில் போக்குவரத்து வார்டன் பிரிவில் புதிதாக பயிற்சி பெற்ற 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story