மெரினாவில் வடிவமைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' மணல் சிற்பம்


மெரினாவில் வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் மணல் சிற்பம்
x

சென்னை, மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை

தமிழ்நாடு அரசின் '181' மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம்.

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு அரசின் '181' மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, கீழ்க்காணும் வசனங்கள் "பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதியேற்போம்!" அடங்கிய "பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி" விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏ. த.வேலு, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா, '181' மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, மணற் சிற்பி கஜேந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story