'நடிகர் விஜய் போல் மற்ற நடிகர்களும் மாணவர்களுக்கு உதவ வேண்டும்' - செல்லூர் ராஜு கருத்து


நடிகர் விஜய் போல் மற்ற நடிகர்களும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் - செல்லூர் ராஜு கருத்து
x

நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என செல்லூர் ராஜு கருத்து தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவிக்கப்படது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17-ந்தேதி நடிகர் விஜய் சந்திக்கிறார் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார். நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணிதொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்று தெரிவித்தார். மேலும் விஜய்யைப் போல் மற்ற நடிகர்களும் மாணவர்கள், இளைஞர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



Next Story