காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 542 வழக்குகளுக்கு ரூ.8¼ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
லோக் அதாலத்
காஞ்சீபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக் அதாலத் நடந்தது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சங்க தலைவர் ஜான் வரவேற்றார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் வேளாரேந்தல் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் வினோத்குமார் (வயது 24) கடந்த 2019-ம் ஆண்டு தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இழப்பீட்டு தொகையாக ரூ.19 லட்சத்துக்கான காசோலையை வினோத்குமாரின் தந்தை சக்திவேலிடம் மாவட்ட நீதிபதி இளங்கோவன் வழங்கினார்.
542 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத்தில் மோட்டார் வாகன விபத்து, அசல் வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு, விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை வழக்கு மற்றும் தொழிலாளர் வழக்கு உட்பட மொத்தம் 542 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8¼ கோடி மதிப்பிலான இழப்பீட்டுத்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் நீதிபதிகள் ராஜேஸ்வரி, சரண்யா செல்வம், வாசுதேவன், வக்கீல்கள் சங்க தலைவர் ரமேஷ், அரசு வக்கீல் சத்தியமூர்த்தி, பத்மநாபன், ஹரிஹரன், துரைமுருகன், கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.