பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - மாணவர் உள்பட 3 பேர் கைது


பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை - மாணவர் உள்பட 3 பேர் கைது
x

உடல்நிலை சரியில்லையென்று நாடகமாடி பள்ளி மாணவியிடம் 29 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மாணவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுள்ள பள்ளி மாணவிடம், அதே ஊரை சேர்ந்த மற்றொரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவர் நட்பு ரீதியாக பழகி வந்தார். மாணவர் அந்த மாணவியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாக நாடகமாடி ஒரு பவுன், 2 பவுன் என சிறுக, சிறுக நகைகளை வாங்கி தன்னுடைய நண்பர்களிடம் கொடுத்து அடகு கடைகளில் வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர்.

இந்த நிலையில் தனது உடல் நிலையை காரணம் காட்டி, தன்னிடம் இருந்து சிறுக, சிறுக மொத்தம் 29 பவுன் நகைகளை வாங்கிச்சென்ற அந்த மாணவர் குறித்து சந்தேகம் அடைந்த பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவிடம் நாடகமாடி நகை பறித்த பள்ளி மாணவரையும், அவருக்கு உதவியாக அடகு கடைகளில் நகைகளை விற்று பணமாக மாற்றி கொடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கோபிநாத் (22), வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் (23) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் பல்வேறு அடகு கடைகளில் வைத்திருந்த 29 பவுன் நகைகளையும் மீட்டனர்.


Next Story