சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய நபர் கைது
ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவியை கத்தியால் குத்திய வசந்தை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை,
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
அப்போது அங்கே வந்த ஒரு வசந்த் என்ற இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் காதலிக்க மறுத்தபோது, அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் படுகாயமடைந்த மாணவி, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவியை கத்தியால் குத்திய வசந்தை நீலாங்கரை அருகே சுற்றிவளைத்து போலீசார் கைதுசெய்தனர்.