மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
சென்னை,
சமீபத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் செல்வா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவேட்டை, முரளி, தனலட்சுமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வன்முறையை கட்டுப்படுத்தாமல் அமைதி காக்கும் மத்திய-மாநில பா.ஜ.க. அரசுகளை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவொற்றியூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவொற்றியூர் பகுதி குழு உறுப்பினர் வெங்கட்டையா தலைமையில் ம.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் போராளி அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், கவுன்சிலர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளை செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தண்டையார்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பாக்யா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் விமலா முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.