ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; 3 பேர் சஸ்பெண்ட்


ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்;   3 பேர் சஸ்பெண்ட்
x

திருச்சி அருகே ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததில், கண்டக்டர் பலத்த காயம் அடைந்தார்.

திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை ஸ்ரீரங்கம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகேசன் (வயது 54) பணியாற்றினார். பஸ்சை டிரைவர் பாஸ்கரன் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது, பஸ்சின் பின்பகுதியில் வலதுபுறம் வாசலுக்கு நேராக இருந்த இருக்கையின் நட்டு கழன்று இருந்துள்ளது. அந்த இருக்கையில் கண்டக்டர் உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில், அந்த பஸ், கலையரங்கம் தாண்டி மெக்டோனால்ட் சாலையில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது, எதிர்பாராத விதமாக நட்டு கழன்று இருந்த இருக்கையுடன் கண்டக்டர் சாலையில் விழுந்தார். இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கினார். பின்னர் சாலையில் விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து இருந்த கண்டக்டர் முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிவிட்டார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 More update

Next Story