மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
இந்த ஆண்டுக்கான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும்.
மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.