ம.தி.மு.க. சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியாது - வைகோ


ம.தி.மு.க. சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியாது - வைகோ
x

ம.தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட முடியாது என்று வைகோ தெரிவித்தார்.

30-ம் ஆண்டு விழா

ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழா, சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. விழாவிற்கு பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், கழககுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தொண்டர்கள் - பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோதனைகளை முறியடிப்போம்

ம.தி.மு.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். எத்தனையோ சோதனைகளை, ஏமாற்றங்களை, துரோகங்களை கடந்து ம.தி.மு.க. இன்றைக்கு பீடுநடை போட்டு வருகிறது. இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, ம.தி.மு.க. வெற்றிக்கொடியை நாட்டும். 30-ம் ஆண்டு, ம.தி.மு.க.வுக்கு ஒளிதரும் ஆண்டாக, புது விடியல் தரும் ஆண்டாக, உண்மையான மறுமலர்ச்சியை தரும் ஆண்டாக அமையும் என்று நம்புகிறோம்.

திராவிட மாடல் காலாவதியாகி விட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். அவர்தான் காலாவதி ஆகியிருக்கிறார். தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தவே கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

வெள்ளை அறிக்கை

தி.மு.க. ஆட்சி 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

ம.தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திருப்பூர் துரைசாமி பேசியிருக்கிறார். எதுவும் தெரியாமல் அவர் பேசுகிறார். கட்சியின் வரவு-செலவு கணக்கு ஆடிட்டர் பார்த்து, ஆண்டுதோறும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு கட்சி எப்படி நடக்க வேண்டுமோ, அப்படித்தான் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. திருப்பூர் துரைசாமி வேண்டுமென்றே கசப்பை கொட்டுகிறார். வெள்ளை அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story