கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சி - துரை வைகோ குற்றச்சாட்டு


கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சி - துரை வைகோ குற்றச்சாட்டு
x

திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று துரை வைகோ தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பானது

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அவைத்தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. இதில் கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உடன்பாடு கிடையாது. கடந்த 3 ஆண்டுகளாக கட்சி தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். பல சமயங்களில் தலைவர் (வைகோ) அலைபேசியில், நேரில் அதற்குரிய விளக்கங்களை, சமாதானங்களை செய்திருக்கிறார்.

அவரை கட்சியினர் புறக்கணித்து வருகிறார்கள். அவரது சொந்த ஊரிலேயே தொண்டர்கள் அவரை புறக்கணித்து இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 75 சதவீத அமைப்பு தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுக்குழு கூட்டம் கூடும். அந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகி என்ற முறையில் அவரது குற்றச்சாட்டை வைக்கலாம்.

குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

அவைத்தலைவரின் குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட்டு, கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் வைகோவின் முடிவு. அவைத்தலைவர் கூறியதில் உண்மை இல்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்திருக்கிறார். அவைத்தலைவருக்கும், தி.மு.க. தொழிற்சங்கத்துக்கும் இடையே சொத்து ரீதியாக வழக்கு இருக்கிறது. அவர் தி.மு.க.வில் கட்சியை இணைக்க வேண்டும் என்பதில் குதர்க்கம் இருக்கிறது. எனவே இது குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கடிதம்.

நாங்கள் தொய்வு நிலையில் இருந்து திரும்பி, மீண்டு வரும் நிலையில் இப்போது இருக்கிறோம். அமைப்பு தேர்தல் நடக்கும்போது பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்துக்கும் வைகோ பல வருடங்களாக போராடி வருகிறார். அதுபோல அடுத்தக்கட்டத்திலும் நம்பிக்கையூட்டும் அளவில் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story