சென்னையில் நாளை 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் நாளை 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - மாநகராட்சி அறிவிப்பு
x

சென்னையில் நாளை 2,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) 32-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, வார்டு ஒன்றுக்கு 1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள் என ஒட்டு மொத்தமாக 1,000 சுகாதார குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரெயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்.

எனவே முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் என அனைவரும் நாளை தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில், "சென்னையில் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 405 நபர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக" கூறப்பட்டுள்ளது.


Next Story