மேட்டூர் அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு...!
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இதையடுத்து காவிரி டெல்டா மாவட்டத்தில் பயிரிட்டுள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன் படி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாகவும் மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது. மேலும் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நீர் மட்டம் தினமும் ஒரு அடி வீதம் குறைந்து வருகிறது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று 2-வது நாளாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அணையில் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அணையில் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வைக்கப்படும். அதன்படி பார்த்தால் அணையில் இருந்து இன்னும் 7 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். எனவே இன்னும் 7 நாட்கள் மட்டுமே டெல்டாவுக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.