தண்டையார்பேட்டையில் நள்ளிரவில்: வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு


தண்டையார்பேட்டையில் நள்ளிரவில்: வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு
x

வீ்ட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்தபோது நள்ளிரவில் வீடு புகுந்து 27 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. குப்பம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27). இவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர், டைட்டில் பார்க்கில் வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார், வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு படுக்கை அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிவிரவில் படுக்கை அறையில் இருந்து வெளியே எழுந்து வந்த சுரேஷ்குமார், மற்றொரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதையும், அதில் இருந்த துணிகள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 27 பவுன் தங்க நகை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து வைத்து விட்டு வேலை செய்ததால் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து காசிமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் உரிமையாளர்கள் இருக்கும்போதே வீடு புகுந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.


Next Story