'மிக்ஜம்' புயல் எதிரொலி.. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!


மிக்ஜம் புயல் எதிரொலி.. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
x
தினத்தந்தி 3 Dec 2023 1:35 PM IST (Updated: 3 Dec 2023 2:53 PM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. புயல் காரணமாக, வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்றும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாநில பேரிடர் மீட்புத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story