முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ?; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ?; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

Image Courtesy: PTI (File Photo)

தினத்தந்தி 13 Jan 2023 12:50 PM IST (Updated: 13 Jan 2023 12:52 PM IST)
t-max-icont-min-icon

முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சமத்துவ போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆள்ளாக்கி அழகுபார்த்த நவீன தமிழ்நாட்டி சிற்பி முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இவர்களின் கொள்கைகளையும், லட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்த திராவிட மாடல் ஆட்சி.

திமுக அரசு 20 மாதங்களை கடந்துள்ளது அதற்குள் இமாலய சாதனை செய்துள்ளோம். இலக்கினை அடைவதை நோக்கமாக கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது. அதுவே மக்களின் மனதை வென்றது.

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுய ஆட்சி, ஆகிய தத்துவங்களில் அடிப்படையில் எழுப்பப்பட்ட பலம்வாய்ந்த இயக்கம் திமுக.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அமையவேண்டுமென நாம் திட்டமிட்டோம். திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது சரித்திரபயணமாக ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த 9-ம் தேதி கவர்னர் இந்த மன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொடக்க உரையை ஆற்றினார். அன்று நிகழ்ந்தவற்றை நான் மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்ந்தவும் நூற்றாண்டை கடந்த இந்த சட்டமன்றத்தின் விழிமியங்களை போற்றவும், நான் எனது சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும், என்னை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.

செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா... மயிலாட வான்கோழி தடை செய்வதோ? மான்குயில் பாட கூட்டான்கள் குறை சொல்வதோ? முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ? அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ? உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ? அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ? என்ற திராவிட இயக்க கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை நாம் என்று நினைவில் கொண்டு பெருமித நடைபோடுவோம்.

தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக்காட்டிய நாளாக அன்றைய தினம் (ஜனவரி 9) அமைந்திருந்ததே தவிர வேறொன்றும் இல்லை' என்றார்.


Next Story