மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ... வீடியோ வைரல்


மாணவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ... வீடியோ வைரல்
x

அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகல்பட்டி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டார்.

விழாவில் தலைமை ஆசிரியர் பேசியவுடன், வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அருள் எம்.எல்.ஏ. தான் பேசிவிட்டு செல்வதாக கூறி பேச தொடங்கினார். இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அப்போது அங்கிருந்த பாகல்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் ராஜி, 'எங்களை பேச அழைக்காமல் எப்படி சைக்கிள் வழங்கலாம்' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தரப்பினருக்கும், தி.மு.க. கிளை செயலாளர் ராஜி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திடீரென அருள் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகள் முன்பு தரையில் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார். அவர் மாணவ-மாணவிகளின் முன்பு நடந்த இந்த சம்பவத்துக்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதைப்பார்த்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சியால் எழுந்து நின்றனர்.

இதற்கிடையில் தரையில் விழுந்த அருள் எம்.எல்.ஏ.வை உடன் இருந்த பா.ம.க.வினர் சமாதானம் செய்து தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ.வை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.


Next Story