சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது


சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது
x

சென்னை விமான நிலையத்தில் 6 அடுக்கு கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. டோக்கன் பெற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

6 அடுக்கு கார் நிறுத்தம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் அமைக்கப்பட்ட நவீன 6 அடுக்கு 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' நேற்று அதிகாலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் நிறுத்தம் செயல்படுத்தும் முறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதனால் வாகனங்களை நிறுத்த ரூ.20-ல் இருந்து ரூ.300 வரை இருந்த கட்டணங்கள் ரூ.30-ல் இருந்து ரூ.600 வரை பல மடங்கு உயர்த்தப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 'பிரீபெய்ட் டாக்ஸி' 304 கார்கள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையகத்துக்கு மாதம் ரூ.2,500 கார் நிறுத்த கட்டணமாக கொடுத்து வந்தனர்.

ஆனால் தனியார் ஒப்பந்ததாரர் ஒவ்வொரு டாக்சிக்கும் மாதம் ரூ.6,500 கட்டவேண்டும். அதோடு 104 டாக்சிகளுக்கு மட்டுமே இந்த கட்டணத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும், மீதிமுள்ள 200 கார்களுக்கு 30 நிமிடங்களுக்கு ரூ.75 வீதம் கட்டவேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் டாக்ஸி சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அணிவகுத்து நின்ற வாகனங்கள்

நேற்று அதிகாலை முதல் புதிய கார் நிறுத்தம் செயல்பாட்டுக்கு வந்ததால் விமான நிலையத்துக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு வாயில் அருகே கட்டண சாவடிகள் அமைத்து வாகனங்கள் நுழையும் நேரத்தை கணக்கிட டோக்கன் வழங்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்தில் அதிக விமான சேவைகள் இருக்கும். இதனால் வாகனங்கள் அதிகமாக வந்தன. புதிய டோக்கன் முறையால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

வாக்குவாதம்

மேலும் டோக்கன் பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. விமானிகள், பயணிகள் ஆகியோர் வந்த வாகனங்களும் டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்ததால் விமானத்துக்கு செல்ல தாமதம் ஏற்படும் நிலை உருவானது.

இதனால் விமான நிலையத்துக்கு வந்தவர்கள், கட்டண சாவடிகளில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

தமிழிசையும் சிக்கினார்

இந்த போக்குவரத்து நெரிசலில் தூத்துக்குடிக்கு செல்ல வந்த தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரும் சிக்கி கொண்டது. உடனே போக்குவரத்து போலீசார் அங்கு வந்து கவர்னர் கார் செல்ல வழி ஏற்படுத்தினர்.

மேலும் பயணிகளின் வாகனங்களை விமான முனைய வாசலுக்கு செல்ல அனுமதிக்காததால் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு தங்கள் உடைமைகளை சுமந்தபடி 300 மீட்டர் தூரம் வரை நடந்து விமான முனைய வாசலுக்கு சென்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் பெண் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.


Next Story