கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை


கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 Jun 2023 3:58 PM GMT (Updated: 28 Jun 2023 6:42 AM GMT)

கட்டிட தொழிலாளியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்

பல்லடத்தில் ஆயிரம் ரூபாய்க்காக கட்டிட தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கட்டிட தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). இவருடைய நண்பர் மணிகண்டன் (33). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள சேட்டுதோட்டத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் தேவர்சோலையில் இருந்தபோது அங்குள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஓட்டலில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் தலா ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக சமாதானம் பேசியிருந்தனர். கட்டிட வேலை செய்து சம்பளம் வாங்கிய செல்வராஜ் ரூ.2 ஆயிரத்தை தனது நண்பரிடம் கொடுத்து தேவர்சோலையில் உள்ள ஓட்டல் உரிமையாளரிடம் கொடுக்குமாறு கூறினார். ஆனால் மணிகண்டன் ரூ.1,000 மட்டும் கொடுத்துள்ளார். இதில் கடந்த 26-2-2018 அன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை

அதன்பிறகு 3-3-2018 அன்று இருவரும் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை செல்வராஜிடம் கட்டிட என்ஜினீயர் கொடுத்துள்ளார். தனக்கு பணம் கொடுக்குமாறு மணிகண்டன் கேட்டுள்ளார். ஏற்கனவே ஓட்டல் உரிமையாளருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த மணிகண்டன், அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அதன் கைப்பிடியால் செல்வராஜின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.

இதுகுறித்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்கு மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.


Next Story