நாச்சிபாளையத்துக்கு பஸ் வசதி வேண்டும்
நாச்சிபாளையத்துக்கு பஸ் வசதி வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம், பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது நாச்சிபாளையம் கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பஸ் வசதி கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்சில் ஏறி செல்லும் நிலை உள்ளது. அந்த பஸ்சும், பள்ளி செல்லும் நேரத்திற்கு வருவதில்லை. இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
வீட்டுமனை பட்டா
சின்ன நெகமம் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள பொது கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆத்துப்பொள்ளாச்சி பொதுமக்கள் கொடுத்த மனுவில், மணக்கடவு, ஆத்துப்பொள்ளாச்சி, காளியப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு அளவீடு செய்து கொடுக்காமல் உள்ளது. எனவே விசாரணை செய்து, அளவீடு செய்து வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.