நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் ரெயில் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
நாகர்கோவில் - கன்னியாகுமரி ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரெயில்கள் மாற்று இடத்தில் இருந்தும் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16321), மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) இன்று (ஞாயிற்றுகிழமை) முதல் 27-ந்தேதி வரையில் ரத்துசெய்யப்படுகிறது.
இதேபோல, நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) வரும் 28-ந்தேதி நாகர்கோவில் - நெல்லை இடையே பகுதியளவு ரத்துசெய்யப்பட்டு, அதற்கு மாற்றாக நெல்லையிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும். மேலும், கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் திப்ருகார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22503) வரும் 25-ந்தேதி (நாளை) முதல் 28-ந்தேதி வரை கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திப்ருகார் செல்லும்.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரெயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும். மறுமார்க்கமாக, குருவாயூரில் இருந்து வரும் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ரெயில் நிறுத்தத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.