நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி : சீமான்


நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி : சீமான்
x
தினத்தந்தி 13 Jan 2024 11:15 PM IST (Updated: 25 Jan 2024 3:40 PM IST)
t-max-icont-min-icon

பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று சீமான் கூறினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 'கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் மீதான இனவெறி தாக்குதலை தடுக்க வேண்டும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, 'வீரப்பன் பெயரால் மனித வேட்டை', பா.ஜனதாவின் 'பி டீம்' யார்? என்ற 2 புத்தகத்தையும், தானியங்கி உறுப்பினர் சேர்க்கை செயலி மற்றும் ரத்ததானம் சார்பான பேனரையும் சீமான் வெளியிட்டார்.

அதன்பின்னர் சீமான் பேசியதாவது:-

நாம் எதிர்கொள்ள இருக்கும் 2024 மற்றும் 2026 தேர்தல்கள் தமிழ் பேரினத்திற்கு முக்கியமான தேர்தல் ஆகும். நான் எப்போதும் மற்றொருவனின் தாய்மொழியை அழிப்பவன் அல்ல, எனது தாய்மொழியை வளர்ப்பதே என் வேலை. மக்கள் முடிவு செய்துவிட்டனர், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று தமிழ்நாட்டை ஆளப்போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வடஇந்தியர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றனர். ஒருநாள் தமிழ்நாட்டில் உள்ள மக்களை தாக்குவான். அப்போது அதை தட்டிக்கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதே அதற்கான தீர்வை காண வேண்டும்.

மூச்சை நிறுத்தியவன் மட்டும் இறந்துபோனவன் அல்ல, முயற்சியை நிறுத்தியவனும் இறந்து போனவன்தான். நான் ஒருபோதும் முயற்சியை நிறுத்தப்போவது இல்லை.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் வரட்டும், ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் திராவிடர்களின் வெளிப்பாடு. இந்த முறை அவர்களின் திட்டத்தை தவிடு பொடியாக்கி ஆட்சியை பிடிப்பதே நமது இலக்கு.

பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த முறை பிரதமராக மோடி வந்தால் இந்தியா என்ற பெயரை 'பாரத்' என மாற்றி விடுவார்.

கூட்டணி வைப்பது குறித்து கேட்கிறாா்கள், நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காமல் 7 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. கூட்டணி வைத்தால் 0.005 சதவீதம் வாக்குகள் கூட பெற முடியாது. எனவே, கூட்டணி என்பது எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு தேவை இல்லாத ஒன்று. நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடும்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.


Next Story