நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமராக வருவார் - மத்திய மந்திரி எல்.முருகன்
மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்தியில் ஆட்சி மாற்றம் என்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜனதா மீதும் பிரதமர் நரேந்திரமோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் முன் வைத்துள்ளார். அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டியது எனது கடமை. தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வரத் தொடங்கியுள்ளார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கப்படுகிறார்.
பிரதமரின் வருகையால் தமிழகத்தில் பேரெழுச்சி ஏற்பட்டுள்ளதை பார்த்து மிரண்டு போயுள்ளார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் மீது பேரன்பு கொண்ட நமது பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் உங்களுக்கு ஏன் பயம் ஏற்படுகிறது.
தமிழக மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் வந்து விட்டதால், தி.மு.க.வினருக்கு இப்போது தோல்வி பயம் தொற்றிக் கொண்டு விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் எப்படி மக்களை சந்திப்பது என்று தெரியாமல் தி.மு.க.வினர் நடுங்குகின்றனர்.
குடும்ப அரசியல் செய்து தமிழகத்தை குடும்ப சொத்தாக மாற்ற முயலுபவர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுத்கத்தான் செய்வார்கள்.
தமிழகத்துக்கு மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாமல் தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் தொடர்ந்து பொய் பிரசாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் மானியங்கள் மத்திய நிதி உதவி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகம் ரூபாய் 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது.
மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. வெள்ள பாதிப்பின் போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூபாய் 868 கோடியை மானியமாக வழங்கியது.
தமிழகம் வந்த பிரதமர் குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். ரோகிணி சிறிய வகை ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை மிகு தருணம்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டப் பார்க்கிறார். ஸ்டிக்கர் ஒட்டுவதை கூட சரியாக செய்ய தெரியாமல் சீனக் கொடி பொருந்திய ராக்கெட் படத்துடன் விளம்பரம் வெளியிடுகிறார்கள் தி.மு.க.வினர். தேச பக்தி என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் தி.மு..கவினரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
பெருந்தலைவர் காமராஜரின் கனவை தற்போது நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான். தி.மு.க.வினர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்தபோது, கனிமொழி முயற்சி எடுத்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வந்திருக்கலாமே.
ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்காவே மத்திய அரசில் மந்திரிகளாக பவனி வந்தவர்களுக்கு தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வருவதில் எப்படி அக்கறை இருக்கும்?.
சொந்த அரசியல் நலனுக்காக பிரதமர் மோடி தமிழகத்தை வஞ்சிப்பதாக தி.மு.க. செய்யும் விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. சுயநல அரசியல் செய்யும் தி.மு.க.விற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் இருந்து தி.மு.க. முற்றாக அகற்றப்படும் என்ற பிரதமர் மோடியின் சூளூரையை நினைவுபடுத்துகிறேன். பிரதமரின் அறைகூவலை தேர்தலில் செய்து காட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
''இந்தியாவின் ஆட்சி மாற்றமே எனது பிறந்தநாள் பரிசு'' என்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. தமிழகத்தில் 40 இடங்களிலும், நாடு முழுவதும் 400 இடங்களிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி 3-வது முறையாக அமையும்.
இவ்வாறு அதில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.