மெட்ரோ ரெயில் பாதையில் 5 இடங்களில் புதிய 2 அடுக்கு மேம்பாலம்..
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது.
சென்னை,
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி, சிப்காட், பூந்த மல்லி-கலங்கரை விளக்கம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
2026-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சென்னை வடபழனி 100 அடி சாலையில் மேம்பாலத்துக்கு மேலே உயர்மட்ட ரெயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மேல்தளத்தில் மெட்ரோ ரெயிலும், கீழ் தளத்தில் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களும் செல்கிறது. தரையில் உள்ள சாலையில் வாகனங்கள் செல்கின்றன.
இதேபோன்ற வகையில் தற்போது நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் முக்கியமான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு பயணத்தை எளிதாக்கும். மாநில நெடுஞ்சாலைத் துறைக்கான இந்த பாலங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமே கட்டிக் கொடுக்க உள்ளது.
மியாட் மருத்துவமனை அருகில், சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில் மியாட் மருத்துவமனை அருகே அமையும் மேம்பாலம் 3.14 கி.மீ. நீளம் கொண்டது. இது சென்னை நகரத்தின் மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இருக்கும். 2026-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிவடையும் போது இந்த பாலப் பணிகளும் முடிந்து போக்குவரத்துக்கு தயாராகிவிடும்.
இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மேம்பாலம் அமையும் 5 இடங்களிலும் முதலில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியை முடிப்போம். இதன் தூண்களை மெட்ரோ ரெயில் பாதை மட்டத்துக்கு உயர்த்தி கட்டுவோம். அதைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து மேம்பாலங்கள் கட்டுவோம்.
மியாட் மருத்துவமனை பகுதியில் அமையும் மேம்பாலம் முகலிவாக்கம், ராமாபுரம் பகுதிகளை இணைக்கும். துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் அமையும் மேம்பாலத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். இது ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு கீழ்த்தளத்தில் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும். மேல் தளத்தில் மெட்ரோ ரெயில் செல்லும். தரையில் உள்ள சாலையில் அனைத்து வாகனங்களும் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.