புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x

நாளை இரவு 9 மணி முதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் சென்னை மாநகரம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதன்படி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் வரும் 31-ந்தேதி(நாளை) மாலை 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளை இரவு 9 மணி முதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் சென்னை மாநகரம் கொண்டு வரப்படும் எனவும், கடற்கரை ஓரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குடியிருப்புகளில் போலீசார் அனுமதி பெற்ற பிறகே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2024 புத்தாண்டை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் தொடங்குவதற்கு பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.




Next Story