பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
டெல்லிக்கு செல்ல இருப்பதால் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், நாளை (27.2.2024) காலை பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அவசர அழைப்பின் பேரில், ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய காரணத்தால் நானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமாரும் புதுடெல்லியில் இருப்பதால் நாளை (27.02.2024) நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
எனவே, இந்த மனித சங்கிலி போராட்டத்தில் எங்கள் இருவருக்கு பதிலாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கரு.மாணிக்கம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறும். எனவே, அனைத்து காங்கிரஸ் நண்பர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு மீனவ நண்பர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் உரிமையை காத்திடவும் ஒன்றாக கரம் சேர்த்து இப்போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.