காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்


தினத்தந்தி 19 May 2022 3:01 AM GMT (Updated: 19 May 2022 7:06 AM GMT)

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்ட நிகழ்வானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம்,

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வைகா சித்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதையடுத்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கருட வாகன சேவை கடந்த 15ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார்.

காந்திசாலை, காமராஜர் சாலை மற்றும் நான்குராஜ வீதிகள் வழியாக தேர் செல்கிறது. அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஜனைகோஷ்டியினர் தேரின் பின்புறம் பஜனை பாடல்களை பாடியடி செல்வார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story