என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள் பறிமுதல்


என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள் பறிமுதல்
x

என்.ஐ.ஏ. அமைப்பின் வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை கண்காணித்தல் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக போலீசாரும், என்.ஐ.ஏ. அமைப்பினரும் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் ஏற்கனவே கடந்த 10 மற்றும் 15-ந் தேதிகளில் பல்வேறு நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது, நேற்று இதுபோல 3-வது தடவையாக மீண்டும் சென்னையில் சந்தேகத்தின் பேரில் 4 பேர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய எல்லையில் உள்ள எஸ்.எம்.புகாரி (வயது 57) என்பவர் வீட்டில் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 11 'பென்டிரைவ்'கள், 7 செல்போன்கள், 2 கை கேமராக்கள் மற்றும் மின்சாதப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஏழுகிணறு போலீஸ் நிலைய எல்லையில் உதவி கமிஷனர்கள் பாலகிருஷ்ண பிரபு, லட்சுமணன் தலைமையில் உமர் முக்தர் (33), முகமது இசாக்ஹவுத் (33) ஆகியோர் வீடுகளிலும், ஓட்டேரி போலீஸ் நிலைய எல்லையில் சாகுல்ஹமீது (31) என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 3 பேர் வீடுகளில் நடந்த சோதனையில் லேப்-டாப், 7 செல்போன்கள், 'பென் டிரைவ்' மற்றும் பெட்டி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் டிஜிட்டல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102-ன் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனை வேட்டை தொடரும் என்று தெரிகிறது.

இதேபோல் திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் ஆவாரங்காடு கந்தசாமி நகரில் உள்ள சர்புதீன் (வயது 25), இனாம்குளத்தூர் நடுத்தெருவில் உள்ள சாகுல் ஹமீது (25) ஆகியோரின் வீடுகளில் நேற்று 60-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் ஒரு 'ஹார்டு டிஸ்க்‌', ஒரு மடிக்கணினி, ஒரு 'பென் டிரைவ்', ஒரு செல்போன், ஒரு 'மெமரி சிப்' ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2 மணியளவில் முடிவடைந்தது.


Next Story