அரசு வழங்கும் வேலையும், பணமும் வேண்டாம், எங்கள் நிலமும், ஊரும் மட்டும் போதும்; பரந்தூர் கிராம மக்கள் போர்க்கொடி


அரசு வழங்கும் வேலையும், பணமும் வேண்டாம், எங்கள் நிலமும், ஊரும் மட்டும் போதும்; பரந்தூர் கிராம மக்கள் போர்க்கொடி
x

விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த வேலையும், பணமும் வேண்டாம் என்றும், ஊர் மட்டும் தங்களுக்கு போதும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

அரசு வேலை, கூடுதல் பணம்

சென்னை பரந்தூரில் விமானநிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு சந்தை மதிப்பிலிருந்து 3½ மடங்கு கூடுதல் பணம், குடும்பத்தில் படித்தவருக்கு அரசு வேலை என வாக்குறுதியாக தெரிவித்துள்ளது.

அரசு தெரிவித்திருக்கும் இந்த வாக்குறுதிகளும் வேண்டாம். விமான நிலையமும் வேண்டாம் என்று கிராம மக்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

நிம்மதியாக இருக்கவிடுங்கள்

பரந்தூர் நாகப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோமலா:-

நாங்கள் விமான நிலையம் வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டோம். இப்போது அரசு அளிக்கும் வாக்குறுதியை எதிர்பார்த்து நாங்கள் இல்லை. கூடுதல் பணமும் வேண்டாம்... வேலையும் வேண்டாம்... எங்கள் ஊர் தண்ணீர், காற்று மட்டும் போதும். வேண்டுமென்றால் ரேஷன் கார்டைகூட கொடுத்து விடுகிறோம். எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். விமான நிலையத்தை வேறு எங்கேயாவது அமைத்துக்கொள்ளுங்கள்.

ஏகனாபுரத்தை சேர்ந்த பிரபாவதி:-

அரசு தரும் வாக்குறுதிகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். உயிரைவிட்டாலும் விடுவோமே தவிர, இந்த மண்ணை விடமாட்டோம். இங்குள்ள மனை, வீடு, கல் எங்களுடைய உழைப்பு. இதை அரசா எங்களுக்கு வாங்கி கொடுத்தது. இனியும் வந்து எங்களுக்கு அரசு இதை கட்டிதான் கொடுக்குமா?. எங்களுடைய மாமன், மச்சான் உறவுகள் திருப்பி எங்களுக்கு கிடைக்குமா?. விமான நிலையம் வேண்டாம். என்ன சொன்னாலும் நாங்கள் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்.

ஊரை மட்டும் விட்டால் போதும்

மேலேரி பகுதியை சேர்ந்த பூபதி:-

நிலத்துக்கு பதிலாக பணமும், அரசு வேலையும் கொடுப்பது எல்லாம் சாத்தியம் இல்லை. அரசு தருவதாக கூறும் பணத்தை வைத்து எத்தனை நாள் செலவு செய்ய முடியும். எங்களுக்கு பணமும் வேண்டாம்... வேலையும் வேண்டாம்... விவசாய நிலங்களையும், எங்கள் ஊரையும் மட்டும் விட்டால்போதும். கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என தலைமுறை கடந்து இப்போது நானும் விவசாயம் செய்து வருகிறேன். எங்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. பரம்பரை சொத்தை விட்டு போகமுடியாது. இந்த நிலத்தைவிட்டு வேறு எங்கு சென்றாலும், இங்கிருக்கும் திருப்தி எங்களுக்கு அங்கு கிடைக்காது.

குணகரம்பாக்கம் மேலேரி பகுதியை சேர்ந்த கீர்த்திகா:-

விமான நிலையத்தை இங்கு அமைத்தால் இந்த பகுதி விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டுவிடும். விமான நிலையத்திற்காக அரசு எடுக்கும் நிலத்துக்கு கொடுக்கும் பணத்தை எவ்வளவு நாள் வைத்து வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியும்?. அரசு வேலை தருவதாக கூறுவதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுதான். வீட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும், விவசாயம் பார்ப்பவர்களுக்கும் இந்த அரசு, என்ன வேலை தரும்?. ஒரு வீட்டில் 3 பேர் படித்தவர்களாக இருந்து, ஒருவருக்கு வேலை கொடுத்தால், மற்ற 2 பேரின் நிலை என்ன?. ஒரு நபரின் வருமானத்தில் குடும்பத்தை எப்படி சமாளிக்க முடியும்?. எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்... அரசு தருவதாக கூறும் பணமும், வேலையும் வேண்டாம்...

100 மடங்கு விவசாயம்தான் முக்கியம்

பரந்தூர் கிராமம் நாகப்பட்டு பகுதியை சேர்ந்த மல்லிகா:-

இப்பொழுது நாங்கள் கட்டியிருக்கும் வீட்டை வேறுஇடத்தில் இதே உறுதி தன்மையோடு கட்ட முடியாது. எங்களுக்கு இங்கு எந்த குறையும் இல்லை. அரசு வேலை, கூடுதல் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். வேலை தருவதாக கூறும் அரசு, என் மகனுக்கு கொடுத்தால்கூட 10 முதல் 20 வருஷம்தான் அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் விளையும் பூமி அப்படியல்ல தலைமுறை தலைமுறையாக நீடிக்கும். எனவே இங்கிருந்து போகவே மாட்டோம்.

ஏகனாபுரம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த சுகன்யா:-

அரசு நிலத்துக்கு கொடுக்கும் பணம் செலவுதான் ஆகுமே தவிர, அதனால் எந்த பயனும் இல்லை. நாங்கள் இருக்கும் இந்த விளையும் பூமியில் 10 ரூபாய் செலவு செய்தால், 20 ரூபாய் கிடைக்கும். ஆனால் அரசு கொடுக்கும் பணத்துக்கு அதைவிட அதிகமான செலவுதான் எங்களுக்கு ஏற்படும். எங்களுக்கு நிலமும், ஊரும் போதும். வேறு இடத்தில் இதுபோல விளையும்பூமி எங்களுக்கு கிடைக்குமா?. அடுத்த தலைமுறைக்கு விவசாயம் கண்டிப்பாக தேவை. 10 மடங்கு பணம் தந்தாலும், 100 மடங்கு எங்களுக்கு விவசாயம்தான் முக்கியம்.

யாருக்கும் ஓட்டு இல்லை

குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரிதா:-

எங்களுக்கு அரசு வழங்கும் பணம் தேவையில்லை. பணம்தான் எங்களுக்கு குறிக்கோள் என்று அரசு நினைக்க வேண்டாம். நாங்கள் வளர்ச்சி அடைந்துதான் இருக்கிறோம். விமான நிலையம் வந்துதான் வளர்ச்சி அடைய வேண்டியதில்லை. எங்களுடைய நிம்மதியை கெடுக்காமல், எங்களுடைய நிலத்தையும், ஊரையும் கொடுத்து விடுங்கள். தொடர்ந்து மறுத்துவந்தால் ''யாருக்கும் ஓட்டு இல்லை'' என்ற முடிவை எடுக்கவும் தயங்கமாட்டோம். இது எங்களுடைய பாட்டன் சொத்து. அரசு பணம், வேலை தருவதாக கூறுவதற்கு உத்தரவாதம் என்ன?. இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். எங்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு எதுவும் தெரியாது.

ஏகனாபுரம் அசோகன்:-

அரசு தருவதாக கூறும் வேலையை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அதற்காக நாங்கள் போராடவும் இல்லை. எங்களுக்கு எங்க ஊருதான் முக்கியம். இதை விட்டு ஒரு அங்குலம்கூட நகர மாட்டோம். விமான நிலையம் தேவையில்லை. ஏற்கனவே இருக்கின்ற விமான நிலையத்தில் எந்த அளவுக்கு வசதி இருக்கிறதோ, அதை பயன்படுத்தி ஏறி பயணம் செய்து கொள்ளுங்கள். நாங்கள் விவசாயத்தில் இறங்கி உழைத்தால்தான், உணவு சாப்பிட முடியும். 13 கிராமங்களை வெளியேற்றுவதும், நீர்நிலைகளை அழிப்பதும்தான் நல்ல திட்டமா?. ஏழை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசு நினைத்தால், தயவுசெய்து விமான நிலையத்தை இங்கு அமைக்க வேண்டாம். விமான நிலையம் அமைப்பதற்காக எத்தனை கோடி பணம் எங்களுக்கு கொடுத்தாலும், அதுவும் வேண்டாம். எங்களுடைய நிலம், வீட்டை மட்டும் விட்டுக்கொடுத்தால் போதும்.

ஏமாற்று வேலை

பரந்தூர் நாகப்பட்டு காண்டீபன்:-

பணம் என்பது வெறும் பரிமாற்றத்துக்கு மட்டும்தான். உழைத்தால் தானே பணம் வரும். அவ்வாறு உழைக்கின்ற இடத்தையே பிடுங்குவது சரியல்ல. அரசு தரும் வேலையை விரும்பவில்லை. அது சாத்தியமும் இல்லை. வெறும் ஏமாற்று வேலை.

குணகரம்பாக்கம் மேலேரி ராணி:-

விவசாயத்தை நம்பிதான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது. இந்த மண்ணைவிட்டு எங்கும் செல்ல மாட்டோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை ஒரேநாளில் செலவு செய்துவிட முடியும். ஆனால் ஒரு விளை நிலத்தை ஒரே நாளில் உருவாக்க முடியுமா?. சாகும் வரை வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கூடிய இந்த நிலத்தை கொடுங்கள் என்று இப்படி கேட்கிறார்களே?. அப்படியெல்லாம் கொடுக்க முடியாது.

விவசாயி தாமோதரன்:-

அரசு தருவதாக கூறும் வேலை, கூடுதல் பணம் நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட உள்ள 13 கிராம மக்களை ஒன்றிணைத்து, அரசு கருத்துக்களை கேட்பதோடு, அதன்படி நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story