வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை


வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
x

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்துக்ெகாைல செய்யப்பட்டார். இது தொடர்பாக சகதொழிலாளி கைதானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள முதல் யூனிட்டில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மேஸ்திரி பிரபு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான வேலை செய்து வருகிறார்.

இவரிடம் குரு(வயது 29) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், அத்திப்பட்டு புதுநகர் லேபர் காலனியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அறையில் சக தொழிலாளர்களான கருப்பசாமி, ஆறுமுகம் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 15-ந்தேதி பணி முடிந்து தங்களது அறைக்கு வந்த குரு உள்பட 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அங்கிருந்த இரும்பு கம்பியால் குருவை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த குரு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குரு, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக கருப்பசாமியை கைது செய்தனர். போலீசாரிடம் கருப்பசாமி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கட்டிட மேஸ்திரி பிரபு எங்களுக்கு சம்பள பாக்கி தரவேண்டி இருந்தது. இதற்காக நாங்கள் 3 பேரும் மேஸ்திரி பிரபு வருகைக்காக நாங்கள் தங்கி உள்ள லேபர் காலனியில் காத்திருந்தோம். ஆனால் சொன்னபடி மேஸ்திரி பிரபு சம்பளம் கொண்டு வரவில்லை.


எனவே குரு தான் மேஸ்திரி பிரபுக்கு தகவல் தெரிவித்து அவரை வரவிடாமல் தடுத்ததாக கருதினேன். இது தொடர்பாக எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் குரு, அறையில் சென்று தூங்கி விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காத நான், அறைக்கு சென்று அங்கு போதையில் படுத்து இருந்த குருவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு திருவல்லிக்கேணிக்கு தப்பிச்சென்றுவிட்டேன். இதில் படுகாயம் அடைந்த குரு உயிரிழந்துவிட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான கருப்பசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story