15-ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை முடிய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்


15-ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை முடிய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 11 Jan 2024 2:44 PM IST (Updated: 11 Jan 2024 3:56 PM IST)
t-max-icont-min-icon

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது.

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் 44 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மாதத்தில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது.

அதன் பின்னர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. அதிலும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி வட கடலோர மாவட்டங்களிலும், 16, 17, 18-ம் தேதிகளில் தென் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இந்த மழையால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வானிலை ஆய்வு மையத்தால் கணக்கிடப்படும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பைவிட 2 செ.மீ. மழை அதிகமாக பதிவானது.

வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, பருவமழை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தற்போது பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடியவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதியுடன் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story