ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேரலாம் என செல்லூர் ராஜூ கூறியது அவரது சொந்த கருத்து- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்


ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேரலாம் என செல்லூர் ராஜூ கூறியது அவரது சொந்த கருத்து- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
x

“ஓ.பன்னீர்செல்வம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அ.தி.மு.க.வில் சேரலாம் என செல்லூர் ராஜூ கூறி இருப்பது அவரது சொந்த கருத்து,” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பேட்டி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில், 505 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க.வினர் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு மின்கட்டணத்தை உயர்த்தியும், சொத்து வரியை உயர்த்தியும் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது, மின் தட்டுப்பாடு இருந்தது. அதைப் போக்கி மின்மிகை மாநிலமாக உருவாக்கினார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், பலமுறை மின் கட்டணம் உயர்த்துவதற்கு அழுத்தம் வந்தபோதும், அந்த கடன் சுமையை மக்கள் இடத்தில் திணிக்க மாட்டேன் என்று மின் கட்டணத்தை உயர்த்தவில்லை.

இன்றைக்கு செந்தில்பாலாஜி மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என்கிறார். ஆனால் தி.மு.க. ஆட்சியை காட்டிலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் மின் கட்டணம் குறைவு என்று அவர் கூறவில்லை. அதேபோல் மாதம் ஒருமுறை, மின் கட்டண கணக்கீடு பணி என்று கூறினார்கள். தற்போது பல்வேறு காரணங்களை கூறி காலதாமதம் செய்கிறார்கள். அ.தி.மு.க. அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்தது. தற்போது தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தொடர்கிறது. ஆன்லைன் ரம்மியால் இதுவரை 23 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர்.

செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து

எதிர்க்கட்சியாக இருந்த அப்போது கோ பேக் மோடி என்று சொன்ன தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் கம் பேக் மோடி என டிரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதமருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டால் காவல்துறையால் கைது செய்யப்படுவார்கள் என்று ஆணையாளர் கூறியுள்ளார். இது எதை காட்டுகிறது என்று சொன்னால் தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என்ற நிலையில் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை எதுவும் செய்யவில்லை.

பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நெருக்கத்தை பயன்படுத்தி நீட் தேர்வு ரத்து குறித்து கூறியிருக்கலாம். நீட் தேர்வு குறித்து பேச நல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவறவிட்டு விட்டார். என் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தது அரசியல் காழ்ப்புணர்ச்சி, எந்த ஒரு சோதனைகளையும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன்.

தன்னுடைய ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும், மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்கிறார், எடப்பாடி பழனிசாமி பக்கம் 99 சதவீத அ.தி.மு.க.வினர் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அ.தி.மு.க.வில் சேரலாம் என செல்லூர் ராஜூ கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story