தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துவாரா? அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் கேள்வி


தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துவாரா? அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் கேள்வி
x

மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்?கேள்விகளுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார்.

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் குறித்து கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு குறித்து பேசுகையில், 'தீர்ப்பு குறித்து நாம் முன்னரே கருத்து கூறுவது சரியல்ல. தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள்தான் தலைமை பொறுப்பை ஏற்க முடியும். இதில் கோர்ட்டுக்கோ அல்லது தேர்தல் ஆணையத்துக்கோ எந்த பொறுப்பும் இல்லை' என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் குறித்து பேசுகையில், 'கட்சிக்குள் தொண்டர் ஆதரவை காட்ட அவர் பொதுக்குழுவில் கலந்துகொண்டு இருக்க வேண்டும். அதை விடுத்து கட்சி தலைமை அலுவலகத்துக்குள் சென்று அடித்து நொறுக்குவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கோர்ட்டுக்கு அவர்தான் சென்றுள்ளார். தி.மு.க.வுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதுதானே' என்று காட்டமாக பேசிய தளவாய்சுந்தரம், 'எடப்பாடி பழனிசாமி பின்னால்தான் தொண்டர்கள் உள்ளனர் என்பதை சமீபத்தில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளது' என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் இயற்கையான மரணத்தில் நீதி விசாரணை கேட்டு யாருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினாரோ அவர்களுக்கு ஆதரவாகவே சாட்சியம் அளித்தார். தி.மு.க. ஆட்சியை பாராட்டிய மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சசிகலா விவகாரம் குறித்து பேசுகையில், 'அவர் எல்லோரையும் ஒன்றிணைப்பேன் என்று கூறுவது வேடிக்கையானது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை அவரது அத்தியாயம் முடிந்து போய் விட்டது' என்று கூறியுள்ளார்.

இதுதவிர எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்?, தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு கால செயல்பாடுகள் உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார்.


Next Story