அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூசக பதில்


அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூசக பதில்
x

பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சூசகமாக பதில் அளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோடநாடு விவகாரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், சட்டப்படியும், எம்.ஜி.ஆர். வகுத்து தந்த விதிப்படியும்தான் நடந்தது. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்துகின்ற வகையில், கொச்சைப்படுத்துகின்ற வகையில், அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலே மருது அழகுராஜ் (ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்) பேட்டி அளித்தது என்பது ஒட்டுமொத்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்கள் அத்தனைபேரும் கொதித்து எழுந்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் கோடநாடு குறித்து ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற 2 மாதத்தில் கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது உடனடியாக போர்க்கால அடிப்படையிலே விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினார்.

அந்த குற்றவாளிகள் கர்நாடகா, கேரளாவில் பல்வேறு கொடுங்குற்றங்கள் புரிந்தவர்கள். அவர்களை தி.மு.க. தானே ஜாமீனில் எடுத்தது. குற்றவாளிகளுக்கு முழுமையாக வக்கீல்கள் குழுவை அனுப்பியது தி.மு.க., எங்களை பொறுத்தவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாறுபட்ட கருத்து இல்லை. இந்த பணியைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்தார்.

தி.மு.க.வுடன் கைகோர்ப்பு

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த நிலையிலும் கட்சியில் வரக்கூடாது. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தர்மயுத்தம் தொடங்கி, தமிழகம் முழுவதும் டூர் சென்றார் இல்லையா... ஆனால் அவர் டி.டி.வி.தினகரனை மறைமுகமாக சந்தித்தது குறித்து ஏன் மருது அழகுராஜ் சொல்லவில்லை.

ஓ.பன்னீர்செல்வம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு நல்ல சான்றிதழ் தருகிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். அதன்பிறகு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முதல்-அமைச்சரை பார்க்கும்போது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறார் என்ற அந்த கருத்தை முன்மொழிந்தாரே.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 2 பேரும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்தனர். அவர்கள் எண்ணங்களுக்கு மாறாக ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை, தி.மு.க.வுடன் கைகோர்ப்பது என்று சொன்னால் தொண்டன் இதனை எப்படி ஏற்றுக்கொள்வான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு உள்ள நிலையில் இந்த கோடநாடு விவகாரம் கிளப்பப்படுகிறதா?

பதில்:- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இன்றைக்கு பொய் வழக்கு போட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்து உருப்படியாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கை ஏதாவது எடுத்துள்ளதா? எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும். குறிப்பாக அ.தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

அ.தி.மு.க.வின் நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் கற்பிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை அழித்துவிடலாம் என்றால் அதுமட்டும் நடக்கவே நடக்காது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கமா?

கேள்வி:- தற்போது உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கிவைக்கும் பணி நடைபெறுகிறதா?

பதில்:- நாங்கள் யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை. பொதுக்குழு என்பது சக்திமிக்க அமைப்பு. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதுபோல தொண்டர்களின் தீர்ப்பு இறுதியானது. அதுபோல பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்ப்பு இறுதியானது. இதுதான் விதிமுறை. பொதுக்குழுவிற்கு வாருங்கள். உங்கள் பலம் என்ன. எடப்பாடி பழனிசாமி பலம் என்ன என்பதை காண்பியுங்கள்.

பொதுக்குழு யாரை ஏற்றுகொள்கிறதோ அவரை ஏற்கட்டும். இதுதானே முறை. 5 சதவீத ஆதரவும் இல்லாமல் இப்படி வானத்திற்கும், பூமிக்கும் குதித்தால் எள்ளி நகையாடும் விஷயம்தான். 95 சதவீத தொண்டர்களின் எண்ணம் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்கவேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. வில் அமைச்சராக இருந்தோம். முதல்-அமைச்சராக இருந்தோம். நம்மால் அ.தி.மு.க.வில் சிறு துளி அளவுக்குக்கூட பிரச்சினை வரக்கூடாது என்று நினைக்க வேண்டும்.

ஊர் ஒன்றுபட்டுள்ளது. நாமும் ஒன்றுகூடுவோம் என்ற எண்ணம் இருந்தால் உண்மையில் தொண்டர்கள் பாராட்டுவார்கள். இதனைவிட்டுவிட்டு உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது, கட்சியினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது, கட்சியை முடக்க நினைப்பது. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பது. அந்த தீய எண்ணத்தோடு, தி.மு.க.வின் 'பி' டீமாக இருந்தால் கண்டிப்பாக தொண்டன் வரலாற்றில் மன்னிக்கமாட்டான்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story