வாலிபரை தாக்கிய முதியவர் கைது
வாலிபரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே முனியங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 29). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் திரிசங்கு(75). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு முனியங்குறிச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்பட்ட தகராறின் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனிச்சாமி முனியங்குறிச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திரிசங்கு, பழனிச்சாமியை பார்த்து திட்டியுள்ளார். இதுகுறித்து பழனிச்சாமி தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாய்த்தகராறு முற்றியபோது திரிசங்கு பழனிச்சாமியை திட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து திரிசங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.