ஊட்டி அரசு கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம்


தினத்தந்தி 29 Sept 2023 1:45 AM IST (Updated: 29 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

விரும்பிய பாடப்பிரிவை ஒதுக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டின் பேரில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

விரும்பிய பாடப்பிரிவை ஒதுக்க மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியகுற்றச்சாட்டின் பேரில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசு கலைக்கல்லூரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2023-2024-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது. இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காத போது, அடுத்து கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்து உள்ளனர். பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின் போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு, அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

இவ்வாறு ஒரு பாடப்பிரிவில் இருந்து மற்றொரு பாடப்பிரிவை ஒதுக்குவதற்காக மாணவர்களிடம் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கியதாக கடந்த 14-ந் தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணை அறிக்கை

இதைத்தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்தனர். மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் இயக்குனர் ஆகியோரது உத்தரவின் பேரில், கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, 4 பேராசிரியர்கள், 30 மாணவ-மாணவிகளிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரையும், சென்னை கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story