ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்


ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

ஆயுதபூஜை விடுமுறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதே போல் திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் என கூடுதலாக வருகிற 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

அதே போன்று விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக 24, 25-ந்தேதிகளில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பஸ்களும், பிற தடத்தில் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

பஸ்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்யமாறும், அதற்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம்.மொபைல் ஆப் மூலமுகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story