ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி


ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2023 7:39 AM GMT (Updated: 2023-02-04T13:34:55+05:30)

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென ஓபிஎஸ் இடம் வலியுறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற சிக்கலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அதேபோல, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது, அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாகும். அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து தமக்கு பயத்தை அளிக்கிறது. இன்னொரு கட்சியின் பலவீனத்தை வைத்து வளர நினைத்தால் அது நிலைக்காது.

"வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளை ஆதரிக்க சில கோரிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார்.

வேட்பாளர் தேர்வில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


Next Story